

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக பலமான கூட்டணியை கட்டமைத்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதிமுக தரப்பில் பாஜக, அமமுக, அன்புமணி தலைமையிலான பாமக, தமாகா, தமமுக, ஐஜேகே, புரட்சி பாரதம், புதிய நீதிக்கட்சி என கூட்டணியை உறுதி செய்துள்ளது. எனினும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் நேற்று நடைபெற்ற அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்றும், அதாவது 35 தொகுதிகள் வேண்டும் என்றும் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.