

சென்னை,
சென்னையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக கூட்டணியை விமர்சிக்கும் 'தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அமித்ஷா தரும் ஸ்கிரிப்டை மாற்றாமல் அப்படியே படிக்கிறார் எடப்பாடி. டெல்லி பாஜகவுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் மீண்டும் அடிபணிகிறார் எடப்பாடி பழனிசாமி. நோட்டாவுக்கு கீழே இருந்த பாஜகவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது அதிமுக.
மோடியா லேடியா’ என பா.ஜ.க.விற்கு சாவல்விட்ட ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை, எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார். ஜெயலலிதாவின் ஆன்மாவையே சாகடிக்கும் அளவிற்கு பழனிசாமி பா.ஜ.க.விற்கு அடிபணிந்து ஒவ்வொரு செயலும் செய்து வருகிறார். என்னதான் மேக்கப் போட்டு மறைத்தாலும் எடப்பாடியின் ஒவ்வொரு அறிவிப்புக்கு பின்னாலும் அமித்ஷாதான் இருக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாஜகதான் என்பது வெளிப்படையாக தெரிகிறது. பீகாரில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சீராக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்று மத்திய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதாரண பொதுமக்களை சாலைகளிலேயே சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை பெற்று வருகிறார். அமைச்சர் துரைமுருகனால் முதல்-அமைச்சரை சந்திக்க முடியவில்லை என வேல்முருகன் கூறுவது அபாண்ட குற்றச்சாட்டு. தேர்தலில் வேல்முருகன் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்பதற்காக அவதூறை வீசுகிறார்.
திமுக கூட்டணியில் யாரும், யாருக்கும் அடிமை கிடையாது கூட்டணி கட்சிகளுக்கு முழு சுதந்திரம் உள்ளது; அதனால்தான் பலகட்ட பேச்சுவார்த்தை சென்றது; அடிமையாக நடத்தியிருந்தால் எப்படி 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்கும்.
மனம் ஒத்த கூட்டணியாக திமுக கூட்டணி அமைந்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களின் கருத்தையும் உள்வாங்கி, அவர்களின் பிரதிபலிப்பாக உருவாகி வரும் தி.மு.க தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் ஆதரவோடு 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.