

திண்டுக்கல் ,
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வருகிறார். கொடைக்கானலில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். முதல்-அமைச்சரின் 5 ஆண்டுகள் அயராத உழைப்புக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவரது திட்டங்களுக்கு பரிசாக அதிக வாக்குப்பதிவு கிடைத்துள்ளது. 200க்கும் அதிகமான தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றிபெறும். 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்.
உழவுத்துறை அறிக்கையின்படி என் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் வெளிப்படைதன்மை இல்லாதது ஏன்? என்று வீடியோ ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பியுள்ளேன். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலும் இது போன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது.
அதே போல் பா.ஜனதா, அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மத்திய அரசு யாருக்கு சாதகமாக செயல்படுகிறது என்பது தெரிய வரும்.
எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். போல இதுவரை யாரும் உருவாகவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தினர் தாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போவதைப் போல துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பட்டியலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். எங்கள் கூட்டணியில்தான் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்கு வங்கி உள்ளது.
எனவே எங்கள் கூட்டணியின் பலத்துக்கு முன்பு போட்டியே கிடையாது. ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி ஆகியோர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்பார்கள்.
எஸ்.ஐ.ஆர். சீரமைப்பு காரணமாக வாக்கு சதவீதம் உயர்ந்தது போல கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கமான வாக்குப்பதிவுதான் நடந்துள்ளது. யாருக்காகவும் வாக்கு சதவீதம் உயரவில்லை.
அ.தி.மு.க.வுக்கு வருகிற தேர்தலில் 28 இடங்கள் கூட கிடைக்காது. அவர் எதிர்கட்சி தலைவர் பதவியில் கூட அமர முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.