நமது அம்மா நாளிதழில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் பெயர் நிறுவனராக சேர்ப்பு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய பிளவால் நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பதவியிலிருந்து எடப்பாடி பெயர் நீக்கப்பட்டு இருந்தது
எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் ஆட்சியை இழந்து இருந்த அதிமுக, இந்த முறையும் தோல்வியை சந்தித்ததால், கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. ஆதரவுடன் அ.தி.மு.க. ஆட்சி என்ற பேச்சு எழுந்த நிலையில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவியது.

கருத்து வேறுபாடு

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம். எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது. தொடர்ந்து சட்டசபையில் த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளித்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் விவகாரம் அதிமுகவில் புயலை கிளப்பியது.

இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்பட 26 பேரின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கைக்கையால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக அதிமுகவை சேர்ந்த கல்யாண சுந்தரம் ராஜினாமா செய்தார். இந்த நாளிதழ் சிவி சண்முகம் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது அதிமுகவில் பரபரப்புகள் அடங்கி மீண்டும் இணக்கமான சூழல் திரும்பியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் செய்திகள் நமது அம்மா நாளிதழில் இடம் பெறத்தொடங்கியுள்ளன. நாளிதழின் நிறுவனர் என எடப்பாடி பழனிசாமியின் பெயர் இடம் பெற்றுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com