

கோவை,
கோவையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் தூய்மையான ஆட்சி வர வேண்டும் என்று இளைஞர்கள், பெண்கள், 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை கள் விரும்பினார்கள். அதன் அடிப்படையில் சிறந்த ஆட்சி கொடுக்க நாட்டிலேயே முதன்முறையாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதை வீழ்த்தி, பணமே இல்லாமல் தேர்தலை சந்தித்த வரலாற்றை உருவாக்கி காட்டியவர் முதல்-அமைச்சர் விஜய்.
குறிப்பாக தமிழகம் சிறந்த மாநிலமாக, இந்தியாவுக்கே ஒரு திருப்புமுனையை உருவாக்கும் மாநிலமாக, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை உருவாக்கும் மாநிலமாக அமைய போகிறது. 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு முழு பாதுகாப்பை அளிக்கும் திட்டம், குழந்தைகள் போதைக்கு அடிமையாவதை தடுக்கும் திட்டம், கோவில்கள், பள்ளிகள், பஸ் நிலையங்கள் அருகில் இருக்கும் மதுக்கடைகளை அகற்றுதல் போன்ற திட்டங்கள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் நல்லாட்சி, சிறந்த ஆட்சியை தருவதற்கு இனி எதிர்காலத்தில் தமிழகத்தின் நிரந்தர முதல்-அமைச்சர் என்ற வரலாறு முதல்-அமைச்சர் விஜயால் மட்டுமே படைக்கப்படும். மக்கள் மீதும், கட்சியை கட்டி காத்த தலைவர்கள் மீதும் அக்கறை இல்லாதவர்களுக்குதான் இப்போது சரிவு ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால் அத்திக்கடவு-அவினாசி திட்டம் வரும்போது, எம்.ஜி.ஆர். படம், ஜெயலலிதா படம் தேவையில்லை.
நான்தான் அதை நிறைவேற்றி காட்டினேன் என்று தன் படத்தை வைத்துக்கொண்டு பாராட்டு கூட்டத்தை நடத்தியவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பதை நாடு தெரிந்து கொண்டு இருக்கிறது. தற்போதும் என் சட்டைப்பையில் ஜெயலலிதா படம் தான் இருக்கிறது. எம்.ஜி.ஆர். படம், ஜெயலலிதா படம் வேண்டாம். தன் படம் மட்டுமே போதும், நான் தான் எல்லாம் என்று எண்ணிய எடப்பாடி பழனிசாமியின் கனவு தூள்தூளாகி விட் டது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா தற்போது அவ ருக்கு தண்டனை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.