

சென்னை,
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-வது வாரத்தில் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு இருக்கும் நிலையில், 2024-25-ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் வகையில் அதற்கான பணிகளில் கல்வித்துறை முழு வீச்சில் இறங்கியுள்ளது. அதற்கேற்றாற்போல் பாடப்புத்தகங்கள், நோட்டுகளை அந்தந்த பள்ளிகளுக்கு வழங்குவது தொடர்பான உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
* பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வருகிற 31-ந்தேதிக்குள் வினியோக மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
* முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்துக்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் பெறப்படவில்லை எனில், வேறொரு மாவட்டத்தில் கூடுதலாக பெறப்பட்டிருப்பின் அவற்றை பெற்று தேவையான பள்ளிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் வரை பள்ளிகளில் அவற்றை பாதுகாப்பாக தலைமை ஆசிரியர்கள் வைக்க அறிவுரை வழங்கிட வேண்டும்.
* பள்ளிகள் திறக்கப்படும் நாளன்று மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில நடைமுறைகளை தெரிவித்துள்ளது.