ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு கேள்விக்குறி

தடையில்லா சான்று பெற முடியாமல் தவிப்பதால் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று காப்பகங்களின் சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு கேள்விக்குறி
Published on

குழந்தைகள் காப்பகங்கள்

தமிழக முதல்-அமைச்சருக்கு, தேனி மாவட்டத்தில் ஆதரவற்றோர் காப்பகங்கள் நடத்துபவர்கள் சார்பில் ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் குழந்தைகள் காப்பகங்கள் மிகவும் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இயங்கி வருகின்றன. வசதி படைத்தோர் தங்கள் பிள்ளைகளுக்கான பள்ளிகளை தாங்கள் விரும்பியவாறு தேர்வு செய்கின்றனர். அது சொந்த ஊரிலோ, அருகாமையிலுள்ள நகரிலோ, மற்ற மாவட்டத்திலோ, மற்ற மாநிலங்களிலோ, ஏன் மற்ற நாடுகளில் கூட இருக்கலாம்.

ஆனால் பெற்றோரை இழந்த அல்லது ஒரு பெற்றோரை உடைய குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள், பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் சொந்த மாவட்டத்திலேயே உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான குழந்தைகள் காப்பகங்களில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

தடையில்லா சான்று

வெளி மாவட்டங்களில் இருந்து வரும் குழந்தைகளை சேர்க்கக் கூடாது என்று மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர், அந்தந்த மாவட்ட குழந்தைகள் காப்பகத்தை நடத்துபவர்களிடம் கூறியுள்ளனர். வெளிமாவட்ட குழந்தைகளை சேர்ப்பதாக இருந்தால், அந்தந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும் என்று கூறி அலைக்கழிக்கின்றனர்.

இவ்வாறு தடையில்லா சான்று கேட்கப் போனால் பெரும்பாலும் அந்தந்த மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் அப்படி ஒரு செயல்முறை இல்லை என்று மறுத்து விடுகின்றனர். அல்லது அந்த மாவட்டத்திலேயே சேர்க்க வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். இதனால் ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பும், பாதுகாப்பும் தடைபட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.

உரிமை இல்லையா?

சுதந்திர இந்தியாவில் ஆதரவற்ற, அனாதை குழந்தைகளுக்கென படிப்பு, பாதுகாப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல உரிமை இல்லையா? ஆதரவற்ற குழந்தைகள் தங்கள் பாதுகாப்பு மற்றும் கல்விக்காக மாவட்டங்களை கடந்து செல்ல பாஸ்போர்ட்டு கேட்பது போன்று தடையில்லாச் சான்று கேட்பது வேதனை அளிக்கிறது.

குழந்தைகள் காப்பகங்களில் மாவட்ட வேறுபாடு பார்க்காமல் ஆதரவற்ற குழந்தைகளை சேர்க்க, மற்றும் கட்டணமில்லா குழந்தைகளின் விடுதிகள் செயல்பட மாவட்ட குழந்தைகள் நலக்குழு அனுமதிப்பதின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com