

சென்னை,
சென்னை கோட்டூர்புரத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திபில் கூறியதாவது:-
தமிழகத்தில் முதற்கட்டமாக 5,000 பள்ளிகளில் ஏ.ஐ. கோடிங் கற்றுத்தரப்படும். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும்.
நம் வீட்டுப் பிள்ளைகள் சாட் ஜிபிடி (ChatGPT) அல்லது கூகுள் ஜெமினி (Google Gemini) போன்ற செயலிகளை வெறும் பயனாளர்களாக மட்டுமே பயன்படுத்தாமல், அவர்களே இது போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் இன்குபேஷன் மையங்களாக நமது அரசுப் பள்ளிகள் மாற வேண்டும். இதற்காகப் புதிய ஆசிரியர்களை நியமிக்காமல், தற்போது இருக்கும் ஆசிரியர்களுக்கே 'டிரைனிங் தி டிரெய்னர்ஸ்' முறையில் உயர் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும்.
முதலாவதாக, மாணவர்களின் மனநலனைப் பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்பதால், மெல்ல கற்கும் மாணவர்களை ஒதுக்காமல், அவர்களின் தனித் திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக, வகுப்பறைகள் முதல் கழிப்பறைகள் வரை பள்ளிகளின் உள்கட்டமைப்பைச் சீராகப் பராமரிக்க வேண்டும். ஒரு பிரச்சினை வந்த பிறகு சரி செய்வதை விட, பிரச்சினை வராமல் முன்கூட்டியே தடுத்துப் பராமரிப்பதே இலக்கு.
மூன்றாவதாக, மாதிரி மற்றும் வெற்றிப் பள்ளிகளில் உணவு, மனநலம், உள்கட்டமைப்பு ஆகிய மூன்றையும் தரமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இந்தாண்டு தேர்ச்சி நல்ல நிலையில் இருந்தாலும் போதாது. தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆலோசித்தோம்.
மதம், சாதி அடையாளங்களோடு கல்வி வளாகத்துக்குள் யாரும் வரக்கூடாது. பிரிவினையை தூண்டக்கூடிய, வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் இடமில்லை. தமிழகப் பள்ளி வளாகங்களில் சமூக நீதி, அறிவியல் மற்றும் அடுத்த தலைமுறையினரின் கல்வி மேம்பாடு ஆகிய மூன்றிற்கு மட்டுமே இடமுண்டு; பிரிவினையையோ, வேற்றுமையையோ வளர்க்கும் எதற்கும் இங்கு இடமில்லை.
மாணவர்களின் குற்ற மனநிலையை மாற்றுவதற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் பள்ளி கல்வித்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மூடநம்பிக்கைகளுக்கோ அல்லது அறிவியலுக்குப் புறம்பான காரியங்களுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை, முழுக்க முழுக்கத் தன்னம்பிக்கை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றைப் போதிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், அந்தந்தப் பள்ளிகளில் படித்துப் பெரிய நிலைக்கு வந்த முன்னாள் மாணவர்களைப் பள்ளிகளின் தூதர்களாக (Ambassadors) மீண்டும் அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் தற்போதைய மாணவர்களிடம் தங்களின் கடந்தகால கஷ்டங்களையும், அதைத் தாண்டி எப்படிச் சாதனையாளர்களாக உயர்ந்தார்கள் என்பதையும் பகிர்ந்து கொண்டு பெரிய உத்வேகத்தை அளிப்பார்கள். மாணவர்கள் போதையின் பாதைக்குச் சென்றுவிடாமல் தடுப்பதற்கான அனைத்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் பள்ளி, கல்லூரிகளில் தீவிரப்படுத்த அரசு தயாராக உள்ளது.
இதற்கு முன்னால் தனியார் பள்ளிகள் தங்களின் அங்கீகாரம் (NOC) அல்லது புதுப்பித்தல் சான்றிதழ்களைப் பெறத் தரகர்களிடமோ, 3வது பார்ட்டி புரோக்கர்களிடமோ பல கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கும் லீக்கேஜ் முறை இருந்தது, இப்போது அது முற்றிலும் ஒழிக்கப்பட்டு அனைத்தும் வெளிப்படையாக்கப்பட்டுள்ளது.
லஞ்சத்திற்கான செலவுகள் இல்லாததால், தனியார் பள்ளி உரிமையாளர்கள் தங்களின் கல்விச் செலவைக் குறைத்து, கட்டண அமைப்பை மறுபரிசீலனை செய்து அதனை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கட்டிடப் பாதுகாப்பு மற்றும் தீயணைப்புச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாகத் தரம் பிரிக்கப்பட்டு கடுமையான ஆய்வுகள் நடத்தப்படும். ஆறாம் வகுப்பிலிருந்து திடீரென பத்தாம் அல்லது பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பள்ளிகளைத் தரம் உயர்த்தக் கோரும் அவசர முடிவுகளுக்கு அனுமதியில்லை. அனைத்து உள்கட்டமைப்புத் தகுதிகளையும் முறையாகப் பூர்த்தி செய்தால் மட்டுமே பள்ளிப் புதுப்பித்தலுக்கோ, தரம் உயர்த்துவதற்கோ அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.