போர் சூழலால் முட்டை ஏற்றுமதி பாதிப்பு: நாமக்கல்லில் பண்ணையாளர்களுக்கு ரூ.144 கோடி இழப்பு

நாமக்கல்லில் தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
போர் சூழலால் முட்டை ஏற்றுமதி பாதிப்பு: நாமக்கல்லில் பண்ணையாளர்களுக்கு ரூ.144 கோடி இழப்பு
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட முட்டைக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 8 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவற்றில் துபாய், குவைத், கத்தார், ஓமன், பக்ரைன் போன்ற வளைகுடா நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல்களில் நாள் ஒன்றுக்கு 80 லட்சம் முட்டைகள் கன்டெய்னர்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையே கடந்த மாதம் 28-ந் தேதி முதல் அமெரிக்கா-ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதையொட்டி குவைத், துபாய் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் மூடப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டை ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினசரி 80 லட்சம் வீதம் முட்டைகள் தேங்கி வருகின்றன. எனவே தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து வியாபாரிகள் பண்ணையாளர்களிடம் விலையை குறைத்து வாங்கி வருகின்றனர். எனவே கோழிப்பண்ணை தொழிலில் மீண்டும் மைனஸ் விலை தலைதூக்கி உள்ளது.

இது குறித்து பண்ணையாளர்கள் கூறியதாவது:-

அமெரிக்கா-ஈரான் போரால் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக முட்டை கொள்முதல் விலை 450 காசுகளுக்கு கீழே இருந்து வருகிறது. மேலும் இதை பயன்படுத்தி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து சுமார் 30 காசுகள் வரை குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

அதேநேரத்தில் தற்போது ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 520 காசுகளாக இருப்பதால், ஒரு முட்டைக்கு தினசரி சராசரியாக ரூ.1 வீதம் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தினசரி ரூ.6 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 24 நாட்களில் மட்டும் கோழிப்பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.144 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

கிறிஸ்தவர்களின் தவக்காலம், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரம்ஜான் நோன்புக்காலம் போன்ற காரணங்களால் தமிழகம் மற்றும் கேரளாவில் நுகர்வு சரிந்து இருப்பதால் ஏற்றுமதியாகும் முட்டைகளை உள்ளூரிலும் விற்பனை செய்ய முடியவில்லை. எனவே தான் கொள்முதல் விலையை குறைத்து விற்பனையை அதிகரிக்க முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com