சத்துணவு முட்டை டெண்டர் முறையில் மாற்றம் தமிழகம் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது

தமிழகத்தில் இதுவரை இருந்த சத்துணவு முட்டை டெண்டருக்கான மாநில அளவிலான முறையை மாற்றி, 6 மண்டலங்களாக பிரித்து அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சத்துணவு முட்டை டெண்டர் முறையில் மாற்றம் தமிழகம் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது
Published on

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினசரி தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு 50 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்கான டெண்டர் மாநில அளவில் நடத்தப்பட்டு வந்தது.

அதாவது இந்த டெண்டரை ஏதாவது ஒரு நிறுவனம் எடுத்து, கோழிப்பண்ணையாளர்களிடம் இருந்து முட்டைகளை பெற்று வழங்கி வந்தது.

எனவே இந்த முறையை மாற்ற வேண்டும். ஏற்கனவே இருந்தது போல மாவட்டம் வாரியாக டெண்டர் விட வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களையும் 6 மண்டலங்களாக பிரித்து, டெண்டர் விடப்படும் என அதிரடியாக அறிவித்து உள்ளது.

அதன்படி முதல் மண்டலத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களும், 2-வது மண்டலத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களும், 3-வது மண்டலத்தில் அரியலூர், திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மாவட்டங்களும் இடம் பெற்று உள்ளன.

4-வது மண்டலத்தில் நாமக்கல், சேலம், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மாவட்டங்களும், 5-வது மண்டலத்தில் திண்டுக்கல், தேனி, ஈரோடு, விருதுநகர், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களும், 6-வது மண்டலத்தில் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களும் அடங்கி உள்ளன.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக டெண்டர் சென்னையில் இருந்து செப்டம்பர் 5-ந் தேதி விடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணை தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

சத்துணவு முட்டை கொள்முதலில் இருந்து வந்த மாநில அளவிலான டெண்டர் முறையை தமிழக அரசு மாற்றி அமைத்து உள்ளது. அதன்படி 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் குறைவான தொகைக்கு யார் டெண்டர் கேட்கிறார்களோ அவர்கள் டெண்டரை பெற முடியும்.

மேலும் இந்த புதிய டெண்டரில் சில மாற்றங்களையும் அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர். இது கோழிப்பண்ணையாளர்கள் எளிதில் பங்கேற்கும் வகையில் உள்ளது. எனவே இந்த டெண்டரை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com