

நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 6 நாட்களில் 50 காசுகள் உயர்ந்திருக்கிறது. இன்றும் 10 காசுகள் உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.6.20 ஆக அதிகரித்து இருக்கிறது.
வரலாறு காணாத அளவுக்கு முட்டை விலை உயர்ந்து வருவதற்கு என்ன காரணம் என்பது குறித்து கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் கூறியதாவது:-
”டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரித்துள்ளது. இதனால், முட்டையின் விலையும் உயர்ந்து வருகிறது. கோழித் தீவனத்தில் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது, கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது. அதனால், அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், முட்டையின் விலை விரைவில் ரூ.7-ஐ தொடும். மேலும், தொழிலாளர்கள் பற்றாக்குறையும் இருக்கிறது. இதனால், 100 நாள் திட்ட பயனாளர்களை கோழிப்பண்ணை பணிக்கு பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.