

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள குமரலிங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் கத்தரிக்காய்கள் அவ்வப்போது அறுவடை செய்யப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக நிலவி வந்த கடுமையான வெயில் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, செடிகளில் பூக்கள் உதிர்ந்து கத்தரிக்காய் உற்பத்தி வெகுவாக குறைந்தது.
குமரலிங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் இருந்து கேரளவிற்கு அதிகளவில் கத்தரிக்காய் இங்கிருந்து லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக, விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் கத்தரிக்காயின் விலை உயர்ந்துள்ளது.
நேற்று நடைபெற்ற நேரடி கொள்முதல் நிலையங்களில், 20 கிலோ எடை கொண்ட ஒரு பை கத்தரிக்காய் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதாவது ஒரு கிலோ கத்தரிக்காய் விவசாயிகளிடமிருந்தே நேரடியாக 50 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்பட்டது. இந்த திடீர் விலை உயர்வால் கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ள மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கத்தரிக்காய் வரத்து பாதியாக குறைந்த அதே நேரத்தில், சந்தைகளில் தேவை அதிகரித்துள்ளதே இந்த கிடுகிடு விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்று வியாபாரிகள் கூறினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொதுவாக ஒரு ஏக்கரில் கத்தரிக்காய் சாகுபடி செய்ய நாற்று நடுதல், நிலம் தயாரித்தல், உரம், பூச்சி கொல்லி மருந்து மற்றும் அறுவடை கூலி என மொத்தம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. முறையான பராமரிப்பு இருந்தால் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 8 முதல் 10 டன் வரை எடுக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ 50 ரூபாய் வீதம் விற்றால், செலவுகள் போக 6 மாதத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும். தற்போது கத்தரிக்காய் நல்ல விலைக்கு விற்பனையாவது கடந்த முறை ஏற்பட்ட நஷ்டத்தை இந்த முறை ஈடுகட்டி விடலாம் என்றனர்.