

சென்னை,
மின்மயமாக்கல் 100 சதவீதத்தை நெருங்கிய நிலையில் எல்.என்.ஜி.யில் இயங்கும் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து ரெயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மின்மயமாக்கல் பணிகள் ஏறக்குறைய முழுமையடைந்துள்ள நிலையில், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) மற்றும் டீசல் ஆகிய இரண்டிலும் இயங்கும் புதிய ரெயிலை ரெயில்வே அறிமுகப்படுத்தியது. குஜராத் மாநிலம் சபர்மதி ரெயில் நிலையத்தில் இருந்து 8 பெட்டிகளைக் கொண்ட குளிர்சாதன வசதி இல்லாத இந்த ரெயில் சமீபத்தில் தனது சேவையை தொடங்கியது.
இது முற்றிலும் புதிய ரெயில் அல்ல. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள டீசல், மின்சார ரெயிலில் மாற்றங்கள் செய்யப்பட்டு, இரட்டை எரிபொருளில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்திய ரெயில்வேயில் பெரும்பாலான ரெயில்கள் மின்சார என்ஜின்கள் மூலம் இயக்கப்படுகின்றன. மின்மயமாக்கப்படாத வழித்தடங்களில் டீசல் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. டீசலுக்கு மாற்றாக எல்.என்.ஜி. பயன்படுத்துவதன் மூலம் மாசு வெளியேற்றத்தை குறைக்க முடியும். இதனால், நாடு முழுவதும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள டீசல் மின்சார ரெயில்களை எல்.என்.ஜி.யில் இயங்கும் வகையில் படிப்படியாக மாற்றுவதற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.
ஆமதாபாத் ரெயில்வே கோட்டத்தில் டீசல் என்ஜினை எல்.என்.ஜி.யில் இயங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்துக்கு ரூ.1.86 கோடி செலவிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரெயில்களை மாற்றியமைப்பதன் மூலம், புதிய ரெயில்களை வாங்குவதற்கான செலவைக் குறைக்க முடியும். மேலும் ரெயில்களை இரட்டை எரிபொருளில் இயக்குவது, ரெயில்வேயின் எரிபொருள் செலவை குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பையும் கட்டுப்படுத்துவதற்கு உதவும்.
இந்திய ரெயில்வேயின் வழித்தடங்களில் 99.6 சதவீதம் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எல்.என்.ஜி. ரெயில்களின் தேவை குறித்து அதிகாரிகள் கூறும்போது, 'மின்மயமாக்கப்படாத வழித்தடங்கள், குறைந்த போக்குவரத்து கொண்ட கிளைப்பாதைகள் மற்றும் மின்சார வசதி இல்லாத பகுதிகளில் எல்.என்.ஜி. ரெயில்களை பயன்படுத்த முடியும். ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள டீசல் என்ஜின்களை உடனடியாக கைவிடாமல், அவற்றை இரட்டை எரிபொருளில் இயக்குவதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், ரெயில்வே சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் முடியும் என்றனர்.