மாமல்லபுரம் அருகே வயதான தம்பதியை கொன்று நகை கொள்ளை

மாமல்லபுரம் அருகே வயதான தம்பதியை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது.
மாமல்லபுரம் அருகே வயதான தம்பதியை கொன்று நகை கொள்ளை
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் உள்ள முந்திரிதோப்பு பகுதியில் வசித்து வந்தவர் சகாதேவன் (வயது 92), தென்னக ரெயில்வேயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலைய பிரிவில் கேங்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

அவரது மனைவி ஜானகி (82), இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான முந்திரி தோப்பு பகுதியை ஆண்டு குத்தகைக்கு எடுத்து கணவன்-மனைவி இருவர் மட்டும் அங்குள்ள முந்திரி தோப்பு மத்திய பகுதியில் உள்ள குடிசையில் 50 ஆண்டுகளாக வசித்து வந்தனர். அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

நேற்று காலை சகாதேவனின் அண்ணன் மகன் அங்கு வந்தபோது முந்திர தோப்பில் ஜானகி கழுத்து, காது, மூக்கு அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, தங்கச்சகங்கிலி உள்ளிட்ட 10 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.

அதேபோல் குடிசையில் இருந்த சகாதேவனும் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் அங்கு சென்று குடிசையில் இருந்த சகாதேவன் முந்திரி தோப்பில் கிடந்த ஜானகி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன்-மனைவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முந்திரி தோப்பு குத்தகை எடுப்பதில் ஏற்பட்ட முன் விரோதத்தால் இந்த கொலை நடந்ததா? அல்லது நகைக்காக திட்டமிட்டு இந்த கொலை நடந்ததா? என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகள் பற்றி ஏதாவது துப்பு கிடைக்கிறதா என சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com