

சாலை விபத்து
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள வளையர்பாளையம், வேடர் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 73). இவரது மனைவி லட்சுமி (62). இவர்கள் 2 பேரும் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் கடந்த 4-ந்தேதி கிருஷ்ணராயபுரம் கடைவீதிக்கு வந்தனர். பின்னர் வேலை முடித்து இரவு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிருஷ்ணராயபுரம் அருகே வளையர்பாளையம், வேடர்தெரு பிரிவு சாலை பகுதியில் சென்றபோது, எதிர நீலகிரி மாவட்டம், கட்டப்பட்டையை சேர்ந்த தீபக் குமார் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ராமசாமி, லட்சுமி ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தம்பதி பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராமசாமி, லட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு லட்சுமி பரிதாபமாக இறந்து விட்டார். நேற்று முன்தினம் காலையில் ராமசாமியும் உயிரிழந்தார். இதையடுத்து 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராமசாமியின் பேரன் சரண் கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.