திருமண மண்டபங்களில் உறவினர் போல் நடித்து நகை திருட்டு: முதியவர் கைது

மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
கைது
Published on: 

வானகரம்,

திருமண மண்டபங்களில் உறவினர் போல் நடித்து நகைகள் திருடிய முதிய வரை போலீசார் கைது செய்தனர்.

நகைகள் திருட்டு

சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி (வயது 56). இவரது மகனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்ததும், மணமகன் அறைக்குச் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 2 பவுன் நகைகள் திருடுபோனதை கண்டு உமாபதி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

முதியவர் கைது

இதுகுறித்து உமாபதி அளித்த புகாரின்பேரில் வானகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நகை திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம். கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெகநாதன் (66) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைதான ஜெகநாதன். மதுரவாயல், நொளம்பூர். வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரிய திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கு உறவினர் போல் சென்று, அங்கு உணவு அருந்திவிட்டு, மணமகன் மற்றும் மணமகள் அறைகளில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து 14.5 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X