ஓடும் பஸ்சில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை பயணிகள் அதிர்ச்சி

இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிவிட்டனர்.
ஓடும் பஸ்சில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
பயணிகள் அதிர்ச்சி
Published on

நெல்லை,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த படுக்கை வசதி கொண்ட அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை நாகர்கோவிலை சேர்ந்த கிங்ஸ்லின் என்பவர் ஓட்டினார். பஸ் திருப்பூர் வழியாக வந்தபோது, அங்கிருந்து ஒரு முதியவர் நாகர்கோவிலுக்கு செல்வதற்காக ஏறினார். அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பஸ்சில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இரவு நேரம் என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிவிட்டனர்.

போலீசார் விசாரணை

நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் அந்த பஸ் நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் பகுதியில் வந்தபோது, கண்டக்டர் மின்வி ளக்கை எரியவிட்டார். அப்போது, திருப்பூரில் ஏறிய முதியவர் பஸ்சின் கடைசி இருக்கை அருகே படுக்கைக்கு ஏறி செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு ஏணி போன்ற அமைப்பில் உள்ள கம்பியில் தனது துண்டால் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி கிருஷ்ணன் (வயது 60) என்பது தெரியவந்தது. அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com