

ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தாசம்பட்டி ரெயில் நிலையம் யார்டு பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று அதிகாலை 65 வயதுடைய முதியவர் ஒருவரின் உடல் முகம் சிதைந்த நிலையில் கிடந்தது. இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபண்ணா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதும் குறித்தும், எப்படி இறந்தார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் முதியவர் தற்கொலை செய்யும் நோக்கத்தில் தண்டவாள பாதைக்கு வந்து குறுக்கே படுத்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சென்னை-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி என் 22639) அடிபட்டு அவர் இறந்தது தெரியவந்தது. தற்கொலை செய்து கொண்டவர் சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.