14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
Published on: 

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டத்தில் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்; முதியவர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 65) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் 23.6.2024 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, மேற்சொன்ன நபரை கைது செய்தார்.

7 ஆண்டுகள் சிறை தண்டனை

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி சுரேஷ்குமார் இன்று (17.11,2026) குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

எஸ்.பி. பாராட்டு

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), சேரன்மகாதேவி டி.எஸ்.பி. அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி (தற்போது மதுரை மாவட்டம்), வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த நீதிமன்ற தலைமை காவலர் ஜோதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி பாராட்டினார்.

26 போக்சோ வழக்குகள்; 27 பேருக்கு தண்டனை

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 26 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 27 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 2 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 5 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

X