6 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல்: முதியவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முதியவர், 6 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டார்.
6 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல்: முதியவருக்கு ஆயுள் தண்டனை
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு, நமச்சிவாயம் (வயது 65) என்பவர் 6 வயது சிறுவனிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, முந்தைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி மற்றும் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளியை கைது செய்தனர்.

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் நேற்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை சீராக நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. கணேஷ்குமார், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாமா பத்மினி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்) மற்றும் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால், போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தொடர்ந்து கடுமையான தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் (2025) 28 போக்சோ சட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 29 நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இரண்டு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், நேற்று மற்றொரு நபருக்கு ஆயுள் தண்டனையும் பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com