காஞ்சீபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து முதியவரை கொன்று நகை கொள்ளை - தம்பி மகன் கைது

காஞ்சீபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து முதியவரை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது தம்பி மகன் கைது செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம் அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து முதியவரை கொன்று நகை கொள்ளை - தம்பி மகன் கைது
Published on

காஞ்சீபுரம் தாலுகா வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட நீர்வள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). கூலித்தொழிலாளி. இவர் நேற்று உயிரிழந்த நிலையில் இறுதிச்சடங்குகள் மேற்கொள்வதற்காக உறவினர்கள் தயாராகி வந்தனர்.

இவரது மகன் கிருஷ்ணன். அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இறுதிச்சடங்குக்காக தந்தையின் வீட்டில் இருந்த பணத்தை எடுக்க சென்றபோது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தார்.

அதனால் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாந்தாராம் தலைமையில் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கோவிந்தனின் வீட்டை சோதனை செய்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கோவிந்தனின் தம்பி மகனான நீர்வள்ளூர் கிராமத்தை சேர்ந்த பால்வண்டி டிரைவர் பாட்ஷா என்கின்ற பாஸ்கரன் (25) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாஸ்கரன் தனது பெரியப்பாவிடம் உள்ள ரூ.3 லட்சத்து 69 ஆயிரம் மற்றும் 15 பவுன் நகைகளுக்கு ஆசைப்பட்டு மதுவில் கொக்கு மருந்து விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்தையும் 15 பவுன் தங்க நகைகளையும் போலீசார் கைப்பற்றினர். பாஸ்கரனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com