திருவாரூர் அருகே ஆன்லைன் ரம்மி கடனுக்காக மூதாட்டி அடித்துக் கொலை: கலெக்டர் ஆபீஸ் ஊழியர் கைது

அறிவுமணியின் நடவடிக்கைகள் மற்றும் முன்னுக்குப்பின் முரணான பேச்சுகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
திருவாரூர் அருகே ஆன்லைன் ரம்மி கடனுக்காக மூதாட்டி அடித்துக் கொலை: கலெக்டர் ஆபீஸ் ஊழியர் கைது
அறிவுமணி- கலைச்செல்வி
Published on: 

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் சுமையைக் குறைக்க, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை அடித்துக் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தற்காலிக ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நகைக்காக நடந்த கொடூரம்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாபநாசம் உத்தானி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கலைச்செல்வி (60 வயது). இவர் கடந்த சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபரால் தலையில் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் இருந்த தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மூதாட்டி சடலமாகக் கிடப்பது குறித்து வலங்கைமான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி, போலீசார் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்தவரும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வருபவருமான அறிவுமணி (வயது 28) என்பவர், போலீசாருடன் சேர்ந்துகொண்டு குற்றவாளியைத் தேடுவது போலவும், அவர்களுக்கு உதவுவது போலவும் நடித்துள்ளார்.

நாடகம் அம்பலம்- கைது

அறிவுமணியின் நடவடிக்கைகள் மற்றும் முன்னுக்குப்பின் முரணான பேச்சுகள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரைத் தனியாக அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவரே மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறிவுமணியை போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைன் ரம்மி விபரீதம்

கைது செய்யப்பட்ட அறிவுமணிக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடுமையான கடன் சுமைக்கு ஆளாகியுள்ளார். கடனை அடைக்க என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அவர், தனியாக வசித்து வந்த மூதாட்டி கலைச்செல்வியைக் கொலை செய்து, அவரது நகைகளை கொள்ளையடிக்கத் திட்டமிட்டு இந்த கொடூரச் செயலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com