

கரூர்,
ஒரு கிராம் நகைக்காக மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலையம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் இளஞ்சியம் (வயது 60). இவர் தினந்தோறும் லாலாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள வாழைத்தோப்புக்கு ஆடு, மாடுகளுக்காக புல் அறுப்பதற்காக செல்வார். நேற்று வழக்கம்போல் கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர், மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.
பின்னர், மூதாட்டியின் மூக்கில் இருந்த ஒரு கிராம் தங்க மூக்குத்தியை அறுத்து எடுத்து விட்டு அருகிலுள்ள முட்புதரில் உடலை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.
மூதாட்டியை காணவில்லை என உறவினர்கள் நேற்று இரவு முழுவதும் தேடி அலைந்தனர். இன்று காலை வாழைத்தோப்பிற்கு சென்று பார்த்தபோது அங்கு ரத்தக்கறையாக இருந்துள்ளது. ரத்தக்கறைகள் படிந்திருந்த வழியே தொடர்ந்து சென்றபோது மூதாட்டியின் சடலம் முட்புதரில் கிடந்தது. அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.
இது குறித்து லாலாப்பேட்டை போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மண்டல டிஐஜி சிபி. சக்கரவர்த்தி மற்றும் கரூர் மாவட்ட எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
ஒரு கிராம் தங்க மூக்குத்திக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. கொலை வழக்கு பதிவு செய்து, கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.