

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை கிழக்கு தெருவைச் சேர்ந்த காலையா பிள்ளையின் மனைவி செலியம்மாள் (80). இவர் இன்று முற்பகல் சுமார் 11.45 மணியளவில், சிவகளை பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தை அதன் டிரைவர் திடீரென பின்னோக்கி இயக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக பின்னோக்கி வந்த வாகனம், சாலையோரமாக நடந்து வந்த செலியம்மாள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செலியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சாயர்புரம் காவல் நிலைய போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி சிவராமங்கலம் பழைய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த தண்டபாணியின் மகன் நம்பி துரை (35) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.