மிளகாய் பறிக்க சென்ற மூதாட்டி உயிரிழப்பு: வெயில் கொடுமையால் சோகம்

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், குளத்தூர்-வேடநத்தம் சாலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் மிளகாய் பயிரிட்டிருந்தார்.
மிளகாய் பறிக்க சென்ற மூதாட்டி உயிரிழப்பு: வெயில் கொடுமையால் சோகம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்த செல்லையா மகள் வள்ளியம்மாள் (வயது 70). திருமணமாகாத இவர், குளத்தூர்-வேடநத்தம் சாலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் மிளகாய் பயிரிட்டிருந்தார். நேற்று காலை வழக்கம்போல் மிளகாய் பறிப்பதற்காக தனது நிலத்திற்கு சென்றுள்ளார்.

மாலை நேரமாகியும் வள்ளியம்மாள் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அவரது அக்கா மகன் காமராஜிற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் நிலத்திற்கு சென்று தேடியபோது, வள்ளியம்மாள் நிலத்தில் குப்புற விழுந்த நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார், வள்ளியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வள்ளியம்மாள் மிளகாய் பறித்துக் கொண்டிருந்தபோது, நிலவிய கடும் வெயில் மற்றும் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com