

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அடுத்த அகரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடத்தி (வயது 66). இவர் 100 நாள் வேலை திட்ட பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மாடத்தி தனது மகள் பேச்சியம்மாள் மற்றும் மகன் அண்ணாமலை ஆகியோரது வீடுகளில் மாறி மாறி தங்கி வாழ்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நேற்று வழக்கம்போல் 100 நாள் வேலையை முடித்துவிட்டு, மாலை 6 மணியளவில் வீட்டில் இருந்து குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவர் வழக்கம்போல தனது மகள் அல்லது மகன் வீட்டில் தங்கியிருக்கலாம் என உறவினர்கள் நினைத்ததால், நேற்று இரவு அவரை யாரும் தேடவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை மாடத்தி 100 நாள் வேலைக்கு செல்லவில்லை என்று தெரியவந்ததை அடுத்து, உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பல்வேறு இடங்களில் விசாரித்து தேடினர். அப்போது தாமிரபரணி ஆற்றங்கரையில் மாடத்தி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக முறப்பநாடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர், உயிரிழந்த மாடத்தியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.