பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டில் மூதாட்டி தங்கியிருந்து வேலை செய்து வந்தார்
கோவை,
பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் ரூ.3,000 ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள வேடபட்டி சத்யா நகரைச் சேர்ந்தவர் வீரம்மாள் (வயது 87). இவரது கணவர் உயிரிழந்து விட்டார். இதனால் அவர் கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக வீரம்மாள் ஆட்டோ மூலம் நாகராஜபுரம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்து ரேஷன் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென அவர் சாலையோரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






