

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே ஓடும் தென்பெண்ணை ஆற்றில் இன்று வெள்ளநீர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அப்போது மூதாட்டி ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி ஆற்றின் நடுப்பகுதியில் இருந்த பெரிய பாறைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டார். பாறைகளை இறுகப் பற்றிக் கொண்டு உயிர் தப்ப முயன்ற அவர், உதவி கோரி சத்தமிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வெள்ளநீரை பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் இறங்கி கயிறுகளின் உதவியுடன் பாறையில் சிக்கியிருந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியின் அடையாளம் மற்றும் அவர் ஆற்றில் எவ்வாறு விழுந்தார் என்பது குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.