அரசு நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி மூதாட்டியிடம் 1 பவுன் சங்கிலி அபேஸ்!

மூதாட்டியிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி மூதாட்டியிடம் 1 பவுன் சங்கிலி அபேஸ்!
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி பார்வதி (75). கடந்த ஜூன் 19-ஆம் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி பார்வதி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத ஒரு பெண் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

அரசு நிதி உதவி

அவர் பார்வதியிடம், "நான் அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுத் தருவதற்காக விபரங்களை எழுதி வாங்க வந்துள்ளேன்" என்று கூறிப் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு வாங்கித் குடித்துவிட்டு, தொடர்ந்து மூதாட்டியிடம் பேசியுள்ளார்.

அப்போது அந்த மர்மப் பெண், "தற்போது அரசு அதிகாரி ஒருவர் சரிபார்ப்பதற்காக வெளியே வருகிறார்; நீங்கள் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தால் வசதியானவர் என்று நினைத்து அரசுப் பணம் வழங்க மறுத்துவிடுவார். எனவே, செயினைக் கழற்றிப் பத்திரமாக வையுங்கள்" என்று கூறியுள்ளார்.

1 பவுன் தங்கச் சங்கிலி

இதனை நம்பிய மூதாட்டி பார்வதி, தன் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்கச் சங்கிலியைக் கழற்றியுள்ளார். உடனே அந்தப் பெண், "என்னிடம் தாருங்கள், நான் பத்திரமாகத் தருகிறேன்" எனக் கூறி சங்கிலியைத் தன் கையில் வாங்கிக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து, "அதிகாரி வெளியே பேருந்து நிறுத்தம் அருகில் நிற்கிறார், அங்குச் செல்லலாம்" என மூதாட்டியை அழைத்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் வரை வந்துள்ளார். அங்கு வந்தவுடன் அந்தப் பெண் திடீரென வந்த ஒரு பேருந்தில் ஏறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மூதாட்டி தன் சங்கிலியைக் கேட்க, "நான் நாளைக்கு உங்களது வீட்டிற்கே நேரில் வந்து தந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டுப் பேருந்தில் தப்பிச் சென்றுவிட்டார்.

வழக்குப்பதிவு

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி பார்வதி, வீட்டிற்கு வந்த தன் மகன் பூபதியிடம் இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பூபதி வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பேருந்து நிறுத்தப் பகுதி மற்றும் சுற்றுவட்டாரக் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, நகையைப் பறித்துச் சென்ற மர்மப் பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com