தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை இடையூறு செய்யக்கூடாது: கூட்டுறவு சங்கங்களை கலைப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

கூட்டுறவு சங்கங்களை கலைப்பதை எதிர்த்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தொடர்ந்து பணியாற்ற இடையூறு செய்யக்கூடாது என்று உத்தரவிடக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை இடையூறு செய்யக்கூடாது: கூட்டுறவு சங்கங்களை கலைப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
Published on

சென்னை,

விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கூட்டுறவு சங்கம் என்பது ஓர் தன்னாட்சி அமைப்பு. இதை நிர்வகிக்க சட்டங்களும், நடைமுறைகளும் உள்ளன. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் லாபகரமாக, நிதி ஸ்திரத்தன்மையோடு இயங்கி வருகின்றன.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், பெண்கள், ஏழை, எளியோர், நகைக்கடன், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான கடன், விவசாய கடன்கள் பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

கலைக்கவேண்டியது இல்லை

இதுபோன்ற சூழ்நிலையில் கூட்டுறவு சங்கங்களை கலைக்க வேண்டும் என்று அத்துறையின் அமைச்சர் பேட்டி அளித்து இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை திடீரென்று கலைக்கவேண்டிய அவசியம் இல்லை.

தற்போது பதவியில் இருப்பவர்கள், 2018-ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலின்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களது பதவிக்காலம் 2023-ம் ஆண்டு வரை உள்ளது.

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தொடர்ந்து பணியாற்ற இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விரைவில் விசாரணை

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம் மிட்டமாட்டகப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் விஜயா, கடலூர் மாவட்டம் வாகையூர் இடைசெருவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் இளங்கோவன் உள்பட 5 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com