

சென்னை,
அ.தி.மு.க. சார்பில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த 2 நாட்களாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு நேற்று விருப்ப மனு பெறப்பட்டது. இதில் நாங்குநேரி தொகுதிக்கு முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், பாப்புலர் முத்தையா, டாக்டர் சி.என்.ராஜதுரை உள்பட 54 பேரும், விக்கிரவாண்டி தொகுதிக்கு முன்னாள் எம்.பி. ஆர்.லட்சுமணன், ஒன்றிய செயலாளர் வேலு உள்பட 36 பேரும், புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு 10 பேரும் விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர்.
விருப்பமனு தாக்கல் நேற்று மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது.
அ.தி.மு.க. ஆட்சி மன்ற உறுப்பினர்களான கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் இ.மதுசூதனன், அமைப்பு செயலாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் அ.தமிழ் மகன் உசேன், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, மருத்துவ அணி செயலாளர் டாக்டர் பி.வேணுகோபால் ஆகியோர் நேர்காணல் நடத்தினர். மொத்தம் விருப்ப மனு அளித்த 90 பேரில் 20 பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விருப்ப மனு அளித்த எல்லோருக்கும் வாய்ப்பு தர முடியாது. ஒருவருக்கு மட்டும் தான் வாய்ப்பு அளிக்க முடியும். எனவே வாய்ப்பு கிடைக்காதவர்கள் சோர்வடைய கூடாது. கட்சி தலைமை யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ?, அவரது வெற்றிக்கு சுறுசுறுப்பாக மற்றவர்கள் தேர்தல் பணி ஆற்ற வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. தற்போது வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு அப்போது வாய்ப்பு அளிக்கப்படும். எனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நேர்காணல் இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமியிடம் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு விட்டதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பரிசீலனையில் உள்ளது என்று பதில் அளித்தார்.
பின்னர் வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, அ.தி.மு.க. வேட்பாளர்கள் குறித்து நாளையும் (இன்று) ஆலோசிக்கப்படும். அதன் அடிப்படையில் புதன்கிழமை (நாளை) வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.