சென்னையில் காது கேளாதோர், வாய் பேச இயலாதோர்களுக்கு சைகை மொழியில் தேர்தல் விழிப்புணர்வு

அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் காது கேளாதோர், வாய் பேச இயலாதோர்களுக்கு சைகை மொழியில் தேர்தல் விழிப்புணர்வு
Published on

சென்னை,

சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர்களுக்கு சைகை மொழி வாயிலாக தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பது, வாக்களிப்பதன் அவசியம், மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேர்தல் ஆணையத்தால் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள சக்ணனா செயலி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நிகழ்வு பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள விழுதுகள் ஒன் ஸ்டாப் சென்டரில் உள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து சைகை மொழி வாயிலாக எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், அங்குள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத வாக்காளர்களுக்கு அங்கு அமைக்கப்பட்ட சுயபுகைப்பட (Selfie Point) பதாகை முன் நின்று புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், வாக்காளர்களுக்கு தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்கள் சரவணகுமார் (வடசென்னை), சீனிவாசன் (தென் சென்னை) மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com