தேர்தல் விழிப்புணர்வு; சென்னையில் மாபெரும் இருசக்கர மோட்டார் வாகன பேரணி

சென்னை மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
தேர்தல் விழிப்புணர்வு; சென்னையில் மாபெரும் இருசக்கர மோட்டார் வாகன பேரணி
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் நேர்மையான மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு மற்றும் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள், அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் தேர்தல் குறித்த விளம்பரங்கள், வினாடி வினா, பேருந்துகளின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திரையரங்குகள், வானொலி மற்றும் சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வுப் பாடல்கள் உள்ளிட்ட பல்வகை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ரேபிடோ நிறுவனம் இணைந்து சென்னை நேப்பியர் பாலம் அருகில் இருந்து தேர்தல் விழிப்புணர்வுப் பதாகைகளுடன் 300 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பங்கேற்புடன் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியினை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.சுகந்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ரேபிடோ நகர மேலாளர்கள் கிருஷ்ணராஜன், எஸ்.யஷ்வந்த்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியானது, சென்னை நேப்பியர் பாலத்தில் தொடங்கி, விவேகானந்தர் இல்லம் வந்தடைந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் மோட்டார் வாகனத்தில் விழிப்புணர்வுப் பதாகையினை வாக்காளர்களுக்கு காண்பித்து தவறாமல் வாக்களித்திடவும், மெரினா கடற்கரையில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com