

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் மற்றும் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், தாமிரபரணி ஆற்று மணலில் தத்ரூபமான விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஓவியர் கோபி அவர்களால் செதுக்கப்பட்ட இந்த மணல் சிற்பம், அந்த வழியாக சென்ற பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்த ஓவியர் கோபியை, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் பாராட்டி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கொங்கராயகுறிச்சி மகளிர் குழுவினர் திரளாக கலந்துகொண்டு, தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி "100 சதவீதம் வாக்களிப்போம்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நீண்ட மனித சங்கிலி அமைத்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாஹிர் அஹ்மது நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சாத்தான்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் தங்கசாமி முன்னிலை வகித்தார். கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் தனுஷ்கோடி, கிராம உதயம் தொண்டு நிறுவன துணை இயக்குனர் புகழேந்தி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்துகொண்டு, ஜனநாயக கடமையாற்றுவதன் அவசியம் குறித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் துரை, கிராம நிர்வாக அலுவலர்கள் இம்மானுவேல், பலவேசம், கந்தசுப்பு மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். கிராம உதயம் பகுதி அலுவலர் ஆனந்த் நன்றி கூறினார்.