

கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா நினைவு வளைவு அருகில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோட்டக்கலைத் துறை சார்பில் பிரம்மாண்ட காய்கனி கண்காட்சி நடைபெற்றது. இதில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, தர்பூசணி, பூசணிக்காய் மற்றும் அலங்காரப் பூச்செடிகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. இது அங்கு வந்திருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்தது.
இந்த கண்காட்சியின்போது பேசிய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அனைவரும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் கல்வி மற்றும் இயற்கை வளத்தில் முன்னோடியாக இருப்பது போல், வாக்களிப்பதிலும் 100 சதவீதம் எட்டி முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும். இதற்காகவே மணல் சிற்பங்கள், கிராமியக் கலைகள் மற்றும் இத்தகைய புதுமையான கண்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியின்போது தேர்தல் பொதுப் பார்வையாளர் சுபஸ்ரீ நந்தா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் நக்கீரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். கலெக்டர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடம் தேர்தல் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.