சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பாரா கிளைடிங் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

பாரா கிளாடிங்க் மூலம் வானில் பறந்தவாறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பாரா கிளைடிங் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
Published on

சென்னை,

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நிகழ்ச்சியினை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர்/ தெற்கு வட்டார ஆணையாளர் அதாப் ரசூல் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சென்னை மாவட்டம், வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, பெசன்ட் நகர் கடற்கரையில், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பாரா கிளைடிங் மூலம் வானில் பறந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நிகழ்ச்சியினை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர்/ தெற்கு வட்டார ஆணையாளர் அதாப் ரசூல் இன்று (22.03.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில், வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெசன்ட் நகர் கடற்கரையில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் தெற்கு வட்டார ஆணையர் அவர்கள் தலைமையில், எனது வாக்கு எனது உரிமை என்ற தலைப்பில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பின்னர், தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பலகையில் மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் / தெற்கு வட்டார ஆணையாளர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் கையொப்பமிட்டனர்.

தொடர்ந்து, பெசன்ட் நகர் கடற்கரையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், இளம் வாக்காளர்கள் உள்ளிட்ட அனைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலான பாரா கிளாடிங்க் மூலம் வானில் பறந்தவாறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எனது வாக்கு எனது உரிமை சுய விருப்பப்படம் (Selfie Point) பதாகை முன்பு பொதுமக்கள் சுயப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமி பிரியா, தேர்தல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com