உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி..!

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க வேட்பாளர் கசாலியைவிட 69 ஆயிரத்து 355 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான வக்கீல் எம்.எல்.ரவி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை ஏற்கெனவே ஐகோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.

இதற்கிடையில் அந்த தொகுதியின் வாக்காளரான பிரேமலதா என்பவர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் தனக்கு எதிரான வழக்குகள் குறித்த விவரங்களை தவறாக தெரிவித்திருக்கிறார். அதனால் அவரது வேட்புமனுவை ஏற்றதே செல்லாது என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் உதயநிதி ஸ்டாலினும் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

அந்த தீர்ப்பில் தனக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத, நீதிமன்ற விசாரணைக்கு வராத நிலையில் கூட 22 வழக்குகள் குறித்த விவரங்களை உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஒரு அடிப்படை ஆதாரங்களையும் மனுதாரர் சமர்ப்பிக்கவில்லை என்பதால் உதயநிதி ஸ்டாலினின் மனுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com