

சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் கடந்த 2024-ம் ஆண்டு நடந்தபோது, நீலகிரி தொகுதியில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிட்டார். அப்போது, தேர்தல் விதிகளை மீறி தனது ஆதரவாளர்களுடன், அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கர் கோவிலில், தாமரை சின்னம் அச்சிடப்பட்ட துண்டை அணிந்து சென்று, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ததாக அவிநாசி போலீசில் திமுகவைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் எல்.முருகனுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், எல்.முருகன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ஏ.ஆர்.சக்திவேல் ஆஜராகி, வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மத்திய மந்திரி எல்.முருகன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.