தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

12 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுவதால் இதுகுறித்து விளக்கம் அளிக்க கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் முதற்கட்ட வேட்பு மனுக்கள் கடந்த 26-ந் தேதி பெறப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தி.மு.க.வினர் உள்பட 12 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுக்களில், கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தி.மு.க.வினர் தாக்கல் செய்யும் வேட்பு மனுக்கள் பெறப்படுவதில்லை. அப்படியே பெறப்பட்டாலும் ஒப்புகை சீட்டு வழங்கப்படுவதில்லை. ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டாலும் தகுதிவாய்ந்த வேட்பாளர் பட்டியலில் தி.மு.க.வினர் பெயர்கள் இடம்பெறுவதில்லை. ஏதாவது ஒரு காரணம் கூறி வேட்புமனுவை நிராகரித்துவிடுகின்றனர் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே தேர்வு செய்யப்பட வேண்டியவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுவிட்டார்கள். தி.மு.க.வினரின் வேட்புமனுக்கள் எந்த அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது என்பதற்கு கூறும் காரணங்களும் ஏற்கும்படியாக இல்லை. 92 சதவீத சங்கங்களுக்கு தேர்தல் நடத்தாமல் போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்தல் முறைகேடு பெரிய அளவில் நடந்துள்ளதால் 97 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன், தேர்தலில் பிரச்சினை இருந்தால் சங்க பதிவாளரிடம் தான் முறையிட வேண்டும். நேரடியாக வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தது இல்லை. அதனால் தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.ராஜா, தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ள 12 சங்கங்களுக்கான தேர்தல் குறித்து கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com