பாஜக-அதிமுகவின் கருவியாக மாறிய தேர்தல் ஆணையம் - திருமாவளவன்

தேர்தல் ஆணையம் தனது நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாஜக-அதிமுகவின் கருவியாக மாறிய தேர்தல் ஆணையம் - திருமாவளவன்
Published on

சென்னை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் அப்பணியிடத்திலிருந்து நீக்கி வேறொரு அதிகாரியை நியமித்திருப்பது அப்பட்டமான அதிகார மீறலாகும். இந்த எதேச்சதிகாரப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே (ஏப்ரல் 23) உள்ள நிலையில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரைத் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பது தமிழ்நாட்டில் இதுவரை நடவாத ஒரு தவறான முன்மாதிரியாகும். இது அந்தப்பதவிக்குரிய மதிப்பை இழிவுசெய்வதாகும். தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் நேர்மைக்கும், கண்ணியத்துக்கும் பெயர் பெற்றவர். அவர் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாக செயல்பட்டவர் அல்ல. அதிமுக ஆட்சியிலும் முக்கியமான பல பொறுப்புகளை அவர் வகித்திருக்கிறார். அவரது திறமை மற்றும் நேர்மையின் காரணமாகவே அவர் தலைமைச் செயலாளர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தகைய ஒரு அதிகாரியை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் தேர்தல் ஆணையம் நீக்கியிருப்பதன் மூலம் , அது பாஜக - அதிமுக கூட்டணியின் ஒரு கருவியாக மாறிவிட்டதையே காட்டுகிறது.

சுதந்திர இந்திய வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது. தேர்தல் நடக்கவிருக்கும் கேரளாவில் தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய சுற்றறிக்கையில் பாரதிய ஜனதா கட்சியின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது ஒரு ‘கிளரிக்கல் எர்ரர்’ என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று 193 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளனர். தேர்தல் ஆணையருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட்' நோட்டீஸ் அளிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையில் சுமார் 90 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். அதில் 27 லட்சம் பேர் தங்களது பெயர்கள் சட்டவிரோதமாக நீக்கப்பட்டு இருப்பதாக மேல்முறையீடு செய்துள்ளனர். அவ்வாறு நீக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களெல்லாம் இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது பாஜகவின் மதவாத அரசியலுக்குத் தேர்தல் ஆணையம் துணைபோகிறது என்பதற்கு வெளிப்படையான சான்றாகும். தற்போது மிகச் சிறந்த நேர்மையான அதிகாரியாக பெயர் பெற்ற தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்-ஐ நீக்கியிருப்பதன் மூலம், தேர்தல் ஆணையம் தனது நேர்மை மற்றும் நம்பகத்தன்மை எல்லாவற்றையும் இழந்து நிற்கிறது.

சட்ட வரம்புகளை மீறிய தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக முறையையே சீரழிப்பதாக உள்ளது. நாட்டில் அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையமே வழிகோலுவது அதிர்ச்சியை அளிக்கிறது.

நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக -அதிமுகவோடு கூட்டணி அமைத்து செயல்படும் தேர்தல் ஆணையத்தின் சீர்குலைவு வேலைகளைத் தடுத்து நிறுத்த திமுக தலைமையிலான கூட்டணி 200 இடங்களுக்கும் மேல் வெற்றிபெற வேண்டும். அந்த இலக்கை நோக்கிப் பணியாற்றுவோம். மக்கள் சக்தியின் முன்னால் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்துவம் செல்லுபடியாகாது என்பதை நிரூபித்துக் காட்டுவோம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com