

சென்னை,
சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து, வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தி புகார் மனுவை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை பாதுகாக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே மர்மமான முறையில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படுகிறது. மேலும் லேப்டாப் உடன் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது. வாக்கு எண்ணும் மையத்திற்குள் திடீரென கன்டெய்னர் லாரிகள் வருகின்றன. இதனால் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் மீது சந்தேகம் எழுகிறது. தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஓட்டுப்பதிவு குறைந்துள்ள நேரத்தில், இதுபோன்ற சந்தேகம் நிகழ்ந்தால் மக்களின் ஜனநாயக கடமை ஆற்றவது குறையும் இது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். எங்களுக்கு நிறைய புகார்கள் வந்து கொண்டுள்ளன. இதனை திரட்டி கொண்டு வந்து வைப்போம். இது, ஜனநாயகத்தை காக்கும் முயற்சி. தேர்தல் ஆணையம் சரியான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. ஓட்டு எண்ணும் மையங்கள் அருகே, அறிவிக்கப்படாத கட்டிட பணிகள் துவங்குவது, திடீரென மாணவர்கள் நடமாட்டம் நிகழ்வது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.