வாக்கு எண்ணும் மையங்களில் தொகுதி தேர்தல் அலுவலர்கள் தினமும் 2 முறை சென்று ஆய்வு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையங்களில்  தொகுதி தேர்தல் அலுவலர்கள் தினமும் 2 முறை சென்று ஆய்வு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடந்தது. மொத்தமுள்ள 5.73 கோடி வாக்காளர்களில், 4.88 கோடி பேர் வாக்களித்தனர். அதாவது, 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.

இது 75 ஆண்டுகால தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம். தமிழகத்தில் கடந்த 1952-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 56.41 சதவீத வாக்குகள் பதிவாகியது.

2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 78.12 சதவீத வாக்குகள் பதிவாகியது. இதுவே தமிழகத்தின் உச்சபட்ச வாக்குப்பதிவாக இருந்தது. 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்த லில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகியது. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள், பெண்கள் காலையிலே திரண்டு வந்து வாக்களித் தனர். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் வேலைபார்ப்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் திரண்டு வந்து வாக்களித்ததால் நேற்று முன்தினம் வாக்குச்சாவடிகள் அனைத்தும் திருவிழாகோலமாக காட்சியளித்தன.

தி.மு.க., அ.தி.மு.க.. நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் அரசியலில் புதிய வரவான த.வெ.க.வும் தேர்தல் களத்தில் பயணித்ததால் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு உயர்ந்துள்ளதாக கருதப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

பல்வேறு கணக்குகள் கூறப்பட்டாலும், வாக்காளர்களின் எழுச்சி வாக்கு சதவீதம் உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக, 21.67 லட்சம் பேர் கூடுதலாக இந்த முறை வாக்களித்து இருக்கிறார்கள்.

இதற்கிடையே, இந்த உச்சப்பட்ச, வரலாறு காணாத வாக்கு சதவீதம் யாருக்கு சாதகம்? என்ற கேள்வி அரசியல் அரங்கில் பலமாக ஒலிக்க தொடங்கியுள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்கள் இருக்கும் நிலையில், யாருக்கு வெற்றி என்பது தொடர்பாக வலைத்தளங்களிலும், டீக்கடைகளிலும், ரெயில் நிலையங்களிலிலும், முடி திருத்தம் கடைகளிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு நவீன கேமராக்கள் மூலம் இரவு, பகலாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இடங்களுக்கு தகுந்தபடி 3, 4,5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பாதுகாப்பு அரணின் முதல் அடுக்கில் எந்திர துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணுமை மைய பாதுகாப்பு பணிக்காக சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு, பகலாக கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தினமான வருகிற மே 4-ந்தேதி வரை 62 மையங்களும் தீவிர கண்காணிப்பின் கீழ் இருக்கும்.

வாக்கு எண்ணும் மையங்களுக்குள். செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் தினத்தில் அந்த மையங்களின் வளாகத்திற்குள் பட்டாசு வெடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் 62 மையங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தினமும் 2 முறை ஆய்வு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தவும், வாக்குச்சாவடிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அதைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் மறுவாக்குப்பதிவுக்குப் பரிந்துரைக்கவும், படிவம் 17A (வாக்காளர் வருகைப் பதிவேடு) மற்றும் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட்ட பிற தேர்தல் ஆவணங்களை வாக்குப்பதிவிற்குப் பிந்தைய சரிபார்ப்பு குறித்த ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ளது.

* அதன்படி, ஏப்ரல் 24, 2026 அன்று, மேற்கு வங்கத்தில் (முதற்கட்டம்) வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து 152 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் (ACs), பொதுப் பார்வையாளர்கள் (GO) மற்றும் 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் (RO) ஆவணங்கள் சரிபார்ப்பு சுமுகமாக நடத்தப்பட்டது.

*. மேற்கு வங்கப் பொதுத்தேர்தலின் முதற்கட்டத்தில், மொத்தம் உள்ள 1,478 வேட்பாளர்களுக்கும் சரிபார்ப்பு செயல்முறையில் பங்கேற்பதற்கான தேதி, நேரம் மற்றும் இடம் குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 23, 2023 அன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 44,376 வாக்குச்சாவடிகளில், சரிபார்ப்பிற்குப் பிறகு எந்த ஒரு மறுவாக்குப்பதிவும் பரிந்துரைக்கப்படவில்லை.

* இதேபோல், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், ஏப்ரல் 24, 2026 அன்று பொதுப் பார்வையாளர்கள் மற்றும் 1,825 வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஆவணங்கள் சரிபார்ப்பு சுமுகமாக நடத்தப்பட்டது.

* தமிழகப் பொதுத்தேர்தலில், மொத்தம் உள்ள 4,023 வேட்பாளர்களுக்கும் சரிபார்ப்பு செயல்முறையில் பங்கேற்பதற்கான விவரங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டன. ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 75,064 வாக்குச்சாவடிகளில், சரிபார்ப்பிற்குப் பிறகு எந்த ஒரு மறுவாக்குப்பதிவும் பரிந்துரைக்கப்படவில்லை.

* இரு மாநிலங்களிலும் இந்த முழு செயல்முறையும் காணொளி பதிவு (videographed) செய்யப்பட்டது. சரிபார்ப்பிற்குப் பிறகு, படிவம் 17A மற்றும் தொடர்புடைய பொருட்கள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அலுவலரின் (RO) முத்திரையிடப்பட்டு மீண்டும் சீல் வைக்கப்பட்டன.

* ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (EVM-VVPATs) பொதுப் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் (Strong Rooms) பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

* வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறை, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அறையின் கதவுகள்/தாழ்வாரங்களில் சிசிடிவி (CCTV) கண்காணிப்பு உள்ளிட்ட விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (ROs) பாதுகாப்பு அறைகளுக்கு ஒரு நாளில் இருமுறை நேரில் சென்று ஏற்பாடுகளைச் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் (DEOs) தலைமையகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்குத் தினமும் ஒருமுறையும், தலைமையகத்திற்கு வெளியே உள்ள அறைகளுக்கு 3-4 நாட்களுக்கு ஒருமுறையும் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள்.

* பாதுகாப்பு அறைகளைக் கண்காணிப்பதற்காக, அந்த அறைகள் அமைந்துள்ள கட்டிட வளாகத்தில் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் தற்காலிக முகாம்களை அமைத்துத் தொடர்ந்து கண்காணிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com