

சென்னை,
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளன.
அதன்படி, அனைத்து அரசு அதிகாரிகள், அலுவலர்களும் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் பணியாற்றி வருகின்றனர்.
குற்றச்சாட்டு
அரசின் அன்றாட செயல்பாடுகளை அதிகாரிகள் கவனிக்கலாம் என்றாலும், புதிய உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடுதான் பிறப்பிக்க முடியும்.
தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், அலுவலர்கள் தேர்தல் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறும்போது பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.
எனவே அவர்களின் செயல்பாடுகள் பற்றிய புகார்கள், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மூலமாக அளிக்கப்பட்டு வருகிறது.
உண்மைத்தன்மை
இதுபோன்ற புகார்கள், அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் (மாவட்ட கலெக்டர்கள்) அனுப்பி வைக்கப்படுகிறது. அதன் உண்மைத்தன்மையை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரித்து கண்டறிந்து, அதுதொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி மூலமாக அனுப்பி வைக்கிறார்கள். இந்த அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் உத்தரவுகளை பிறப்பிக்கிறது.
ஆளும் கட்சிக்கு சாதகம்
இந்த நிலையில் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி கே.ராஜாமணி, கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் மீது எதிர்க்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் 2 பேரும் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக கூறி, சில ஆவணங்களையும் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சியினர் அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலாளர் மலேய் மாலிக் கடிதம் ஒன்றை தமிழக தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இடமாற்றம்
கே.ராஜாமணி மற்றும் சுமித் சரண் ஆகியோர் குறித்து பெறப்பட்ட பல்வேறு தகவல்களை இந்திய தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டுள்ளது. அதன்படி, அவர்கள் 2 பேரையும் இடமாற்றம் செய்தும், தேர்தல் அல்லாத பணியில் நியமிக்கவும் உத்தரவிடப்படுகிறது.
மேலும், கோவை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் கலெக்டராக எஸ்.நாகராஜன் (தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் முயற்சிகள் நிறுவன இயக்குனர்) நியமிக்கப்பட வேண்டும். சுமித் சரணுக்கு பதிலாக கோவை போலீஸ் கமிஷனராக எஸ்.டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவை செயல்படுத்தியதற்கான அறிக்கையை 24-ந் தேதி (நேற்று) பிற்பகல் 1 மணிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு தலைமைச் செயலாளர் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.