

மதுரை,
மதுரை பரவையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பது, அவருடைய கருத்து. தொடர்ந்து 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி செய்து இருக்கிறது. நாங்கள் மக்களின் வெறுப்பை சம்பாதிக்கவில்லை.
நாங்கள் சந்திக்கும் மக்கள் அனைவரும் நாங்கள் உங்களுக்கு தான் வாக்களித்தோம், ஆனால் இந்த பின்னடைவு எப்படி வந்தது என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள். அந்த மக்கள் கூறிய கருத்தின்படி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது கருத்தை சொல்லி இருப்பார். நாங்கள் எங்களது நண்பர்களை விமர்சனம் செய்ய மாட்டோம். நண்பர்களாக இருக்கும் வரை எப்போதும் அவர்களை விட்டு கொடுக்கவும் மாட்டோம்.
பெட்ரோல்-சிலிண்டர் விலையை இந்த அரசு குறைக்கவில்லை. தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கிறது. இந்த வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். மேகதாது அணை கட்ட கூடாது. அந்தளவுக்கு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்திலும் இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.