அம்பை தொகுதியில் தேர்தல் பரபரப்பு தொடங்கியது! - பொதுக்கூட்ட மைதானங்களை பார்வையிட்ட கலெக்டர்

பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்கு ஏதுவான இடங்கள், மைதானங்கள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
பொதுக்கூட்ட மைதானங்களை பார்வையிட்ட கலெக்டர்
Published on: 

நெல்லை,

அம்பை தொகுதி இடைத்தேர்தல முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அரசியல் கட்சிகளின் பிரசார பொதுக் கூட்டங்கள் நடைபெறும் மைதானங்களை கலெக்டர் ஆனந்த் மோகன் ஆய்வு செய்தார்.

இடைத்தேர்தல்

அம்பை சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் அரசு சார்பில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அம்பை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவார் என அக்கட்சி சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

இதனால் அம்பை தொகுதி இடைத்தேர்தல் மீதான அரசியல் கட்சிகளின் கவனம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஆனந்த் மோகன் நேற்று அம்பை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

மைதானங்கள்

நவம்பர் மாத இறுதியில் தமிழக முதல்-அமைச்சரின் அரசு முறை நிகழ்ச்சி அம்பை பகுதியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களின் வருகையை சமாளிக்கும் வகையில் பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் முதல்-அமைச்சர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்கு ஏதுவான இடங்கள், மைதானங்கள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

ஏற்கனவே பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்த அகஸ்தியர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிரமாண்ட கூட்டங்கள் நடைபெற்ற இடங்களை மாவட்ட கலெக்டர் ஆனந்த் மோகன், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

X