பதவிக்காக அமைச்சர்கள், மோடியை டாடி என்று கூறுவதா? துரோகிகளுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் டி.டி.வி.தினகரன் பேச்சு

பதவிக்காக அமைச்சர்கள், மோடியை டாடி என்று கூறுவதா? என்றும், துரோகிகளுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றும் சேலத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
பதவிக்காக அமைச்சர்கள், மோடியை டாடி என்று கூறுவதா? துரோகிகளுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் டி.டி.வி.தினகரன் பேச்சு
Published on

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வத்தை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை சேலம் சீலநாயக்கன்பட்டி, மல்லூர் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகை வந்தால் 500 முதல் 1000 போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ஏனென்றால் மக்களை சந்திக்க அவருக்கு பயம் இருக்கிறது. விவசாயி என்று கூறும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் விளை நிலங்களை அழித்து ஏன் 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த துடிக்கிறார். விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போராடும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது, சட்டசபையில் அவரது உருவப்படம் திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்ற பா.ம.க.வுடன் தற்போது கூட்டணி வைத்துள்ளனர். துரோகிகளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியா? லேடியா? என்று ஜெயலலிதா கேட்டார். ஆனால் இப்போது மோடியை டாடி என்று சில அமைச்சர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பதவிக்காக அவர்கள் எதை வேண்டுமானலும் செய்வார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தோம். அதேபோல், நாடாளுமன்ற தேர்தலிலும், 18 தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சைகள் வெற்றி பெற்று ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய சூழ்நிலை உருவாகும்.

இந்த நாடாளுமன்ற தேர்தலோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். பிரதமர் மோடி அல்ல, எடப்பாடி பழனிசாமியின் டாடியே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com