

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தலைமையில் 11.03.2026 அன்று ரிப்பன் கட்டட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் எதிர்வரும் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் நடத்த நடத்தை விதிமுறைகளை அமுல்படுத்தி கண்காணிக்க தேர்தல் இணைப்புப் பொறுப்பாளர்கள் (Nodal Officers) நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பறக்கும் படை (FST), நிலையான கண்காணிப்புக் குழு (FST), வீடியோ கண்காணிப்புக் குழு (VST) மற்றும் வீடியோ பார்வையிடும் குழு (VVT) ஆகியவற்றின் மூலம் சென்னை மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களில் நாளொன்றுக்கு தலா 3 குழுக்கள் வீதம் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், 3 நபர்கள் அடங்கிய வீடியோ கண்காணிப்புக் குழு தயார்நிலையில் இருந்திடவும், இந்தக் குழுக்கள் ஒவ்வொரு நாளும் களப்பணியில் இருந்த சட்ட விதிமீறல்கள் ஏதேனும் இருப்பின் அதன் மீது நடைமுறையில் உள்ள சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அதனை உயர்நிலை அலுவலர்களுக்கு அறிக்கையாக சமர்ப்பிப்பார்கள். தேர்தல் செலவின கண்காணிப்புக்காக தேர்தல் கைப்பற்றுகை மேலாண்மை அமைப்பு (Election Seizure Management System) 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் இப்பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், C-VIGIL – (பொதுமக்கள் கண்காணிப்பு) செயலி மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தினார்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.