

சென்னை,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் மற்றும் கக்குராயன் மலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாகச் சிறுத்தை நடமாட்டம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் சிறுத்தை ஆடுகளை வேட்டையாடி வருவதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஒன்னிப்பாளையம் கக்குராயன் மலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளதாக கூறினார்.
வனத்துறையும், கிராம மக்களும் இணைந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். மேலும் பல நாட்கள் கடந்து விட்ட நிலையில், இன்னும் சிறுத்தை பிடிக்கப்படாமல் இருப்பது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாக அண்ணாமலை கூறினார்.
தேர்தல் நேரம் என்பதற்காக, பொதுமக்களை ஆபத்தில் விட்டுவிட கூடாது. இந்த பிரச்சனைக்கு உடனடி கவனம் செலுத்த வேண்டும். மேலும் தமிழக வனத்துறை, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறுத்தையை உடனடியாக பிடிக்கவும். மேலும் அந்த சிறுத்தையை பிடிப்பதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.