மின் பேருந்துகள் லாபத்தில் தான் இயங்குகின்றன - அமைச்சர் சிவசங்கர்

மின்சார பஸ்கள் லாபகரமாக ஓடுகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
சென்னை,
சட்டசபை கேள்வி நேரத்தில், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி.ஜெயசங்கரன், 'ஆத்தூரில் இருந்து திருப்பதிக்கு பஸ் இயக்க அரசு முன்வருமா?' என கேள்வி எழுப்பினார். அதற்கு, 'ஆத்தூர்-திருப்பதி வழித்தடம், தமிழ்நாடு, ஆந்திரா இரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி ஆகும். எனவே இருமாநில ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் போது பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து ஜெயசங்கரன், 'தலைநகர் சென்னையில் தற்போது நூற்றுக்கணக்கான புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த புதிய பஸ்களை இயக்குவதற்கான உரிமைகள் தனியாருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், தினசரி கலெக்ஷன் தொகையை காட்டிலும் இருமடங்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. அவ்வாறு எத்தனை பஸ்கள் இயக்கப்படுகின்றன? எந்த நிறுவனத்துக்கு குத்தகைவிடப்பட்டிருக்கிறது? அதன் தொகை எவ்வளவு? அரசுக்கு ஆகும் கூடுதல் செலவு எவ்வளவு? என்ற துணைக்கேள்வியையும் அவர் எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த பதில் வருமாறு:-
மின்சார பஸ்கள் தனியார் ஒப்பந்த பஸ்களாக இயக்கப்படுகின்றன. அது அந்த பஸ்களை தயாரிக்கும் அசோக்லைலாண்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ''ஓம்'' நிறுவனம்தான் இயக்குகிறது. அவர்கள் தயாரிக்கும் வாகனத்தை அவர்களே தயாரித்து, அவர்களே இயக்குகிறார்கள். இதில் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. மின்சார பஸ்கள் லாபகரமாக ஓடுகிறது.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.






