எண்ணூரில் எந்திர கோளாறால் மின்சார ரெயில் நிறுத்தம்; பயணிகள் மறியல் போராட்டம்

எண்ணூரில் எந்திர கோளாறால் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டதால் சென்னை செல்லும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். மேலும் பொன்னேரியில் பயணிகள் ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
எண்ணூரில் எந்திர கோளாறால் மின்சார ரெயில் நிறுத்தம்; பயணிகள் மறியல் போராட்டம்
Published on

எந்திர கோளாறு

சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 6.35 மணி அளவில் புறநகர் மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு கல்லூரிக்கு வரும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பெருமளவில் அதில் பயணம் செய்தனர். எண்ணூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென மின்சார ரெயிலில் உள்ள 'பான்டோ கிராப்' என்ற கருவியின் ராடு உடைந்து விட்டது. இதனால் மின்சார ரெயிலை மேலே செல்லும் உயர் மின்னழுத்த கம்பியுடன் இணைக்க முடியவில்லை. இதனால் மின்சார ரெயிலை அதற்கு மேல் இயக்க முடியவில்லை.

நடைமேடையில் நிறுத்தம்

அந்த மின்சார ரெயில் எண்ணூர் ரெயில் நிலையத்தில் உள்ள 2-வது நடைமேடையில் நிறுத்திவைக்கப்பட்டது. கோளாறை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக இதற்கு பின்னால் சூலூர்பேட்டையில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. அதே நேரம் சென்டிரலில் இருந்து சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி மற்றும் ஐதராபாத் செல்லும் விரைவு ரெயில்களும் வழக்கம்போல் இயங்கின.

பயணிகள் மறியல் போராட்டம்

ஆனால் 4 மணி நேரத்துக்கு மேல் ஆகியும் கோளாறை முழுமையாக சரி செய்ய முடியவில்லை என தெரிகிறது. இதனால் சூலூர்பேட்டையில் இருந்து வந்த மின்சார ரெயில்கள் எண்ணூர் ரெயில் நிலையத்தில் மட்டும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் பழுதாகி நின்ற மின்சார ரெயில்களில் இருந்த பயணிகள் அந்த ரெயில்களில் ஏறி சென்னை சென்றனர். இதன் காரணமாக மின்சார ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டதால் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.

இதையடுத்து சென்னையில் இருந்து டீசல் என்ஜின் கொண்டு வரப்பட்டு அதன்மூலம் மின்சார ரெயில் ஆவடி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பிறகு சூலூர்பேட்டை-சென்டிரல் வழித்தடத்தில் மின்சார ரெயில் போக்குவரத்து சீரானது. இதற்கிடையே ரெயில் காலதாமதம் தொடர்பாக பொன்னேரி ரெயில் நிலையத்தில் 3-வது நடைமேடையில் இருந்த மின்சார ரெயில் முன்பு பயணிகள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com